இலங்கை அரசனான இராவணன், சிவபெருமானை நோக்கி தவம் செய்து அவரிடம் இருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற்று இலங்கைக்கு எடுத்துச் சென்றான். தேவர்களின் வேண்டுகோளின்படி விநாயகப் பெருமான் ஒரு தந்திரம் செய்து இத்தலத்தில் கீழே வைக்க வைத்தார். பின்னர் அதை இராவணன் எடுக்க முயன்றபோது, சிவலிங்கம் வராமல் போகவே, வெறுங்கையுடன் இலங்கை சென்றான். அதனால் இத்தலத்து மூலவர் 'மகாபல லிங்கேஸ்வரர்' என்றும் 'மகாபலேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார்.
இராவணன் எடுக்க கடும் முயற்சி செய்ததால் லிங்கத் திருமேனி பசுவின் காது போல் வளைந்து நீண்டது. அதனால் இத்தலம் 'கோகர்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கோ - பசு, கர்ணம் - காது. அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் பாணம் இல்லாமல் துவாரம் மட்டும் உள்ளது. அந்த துவாரத்தில் நீர் பால் போன்ற அபிஷேக பொருட்களால் நாமே அபிஷேகம் செய்யலாம். மலரிட்டு வணங்கலாம். கைவைத்து தொட்டு வழிபடலாம். மூலவர் சன்னதிக்கு பின்புறம் அம்பாள் சன்னதி உள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஆத்ம லிங்க பூஜை நடைபெறுகிறது. தற்போது குழியாக இருக்கும் இடத்தில் உள்ள பீடத்தை அகற்றி லிங்கத்தை வெளியில் எடுத்து பூஜை செய்கின்றனர்.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
|